புனித அகிலத்திரட்டு அம்மானை 186-வது உதயதின விழா
#அய்யா துணை
அன்பான அய்யாவின் பிள்ளைகளே! கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் வைகுண்டரின் திருவருளால் அகிலஉலக அய்யாபதிகள் கூட்டமைப்பு(IPAC) மற்றும் தாமரைகுளம்பதி அன்பு கொடி மக்கள் இணைந்து நடத்தும் புனித அகிலத்திரட்டு உதயதின விழா பாதயாத்திரை! அனைவரும் வருக! உலகளந்த ஆண்டவனின் திருவருளை பெறுக!
வைகுண்டர் வருடம் 193 ஆம் ஆண்டு,கார்த்திகை 19 (05-12-2025) ஞாயிற்றுக்கிழமை முதல்கார்த்திகை 27 (13-12-2025) சனிக்கிழமை முடிய
தொடங்கும் இடம்: அய்யா வைகுண்ட தர்மபதி, மணலிபுதுநகர், சென்னை
வந்துசேரும் இடம்: புனித அகிலத்திரட்டு அம்மானை அருளிய தாமரைகுளம்பதி, கன்னியாகுமரி மாவட்டம்
புனிதயாத்திரை நோக்கம்:
1. தமிழ் வேதமான புனித அகிலத்திரட்டு அம்மானையை உலக மக்கள் அறியும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் புனித நூலாக அங்கீகரித்து அறிவிக்க வேண்டும்.
தமிழ் வேதமான புனித அகிலத்திரட்டு அம்மானைக்கு பல்கலை கழகத்தில் ஆராய்ச்சி இருக்கை அமைக்க வேண்டும்.
தமிழ் வேதம் தந்த ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரமான வைகுண்டரின் போதனைப்படி சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக தினமும் லட்சகணக்கான பேர்களுக்கு (கிட்டத்தட்ட 7000 பதிகளில்) அன்னதர்மமும், அனைத்து சாதியினரையும் ஒருங்கிணைந்து வழிபடும் வகையில் ஆன்மிக மற்றும் சமூக மாற்றத்தை ஏற்படுத்திய, தமிழ் வேதம் கொடுத்த கடவுளை வழிபடும் அய்யாவழி மக்களுக்கு சிறப்பு செய்யும் வகையில் புனித அகிலத்திரட்டு உதயதினமான கார்த்திகை 27- அன்று “தமிழ் வேதம் தந்த கடவுள் வைகுண்டர் தினம்” என தமிழக அரசை அறிவிக்க கோரியும்
ஸ்ரீமன் வைகுண்டசுவாமி அவதார தினமான மாசி 20, மாநில அரசு பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும்
இன்று முதல் யானிருக்கும் இடங்களிலே சாதி எல்லாம் ஒன்று போல் என்னிடத்தில் ஒத்து மிக வாரும் – ஸ்ரீமன் வைகுண்டசுவாமி
புனித அகிலத்திரட்டு அம்மானை பற்றிய குறிப்பு:
இப்புனித வேதநூலானது கொல்லம் ஆண்டு 1016, கார்த்திகை மாதம் 27-ம் தியதி இப்பூமியில் இறைவனால் அருளப்பட்டது. இப்புனித வேதநூலில் உலகம் தோன்றியது முதல் குரோணி என்ற அசுரன் தோன்றி அநியாயங்கள் செய்த போது மகாவிஷ்ணு தானே குரோணியை ஆறு துண்டுகளாக வெட்டி உலகில் தள்ளியதும், ஒவ்வொரு யுகங்களிலாக குண்டோமசாலி, தில்லைமல்லாலன், மல்லோசிவாகனன், சூரபத்மன், இரணியன், இராவணன், துரியோதனன் என கொடிய அசுரர்களாகப் பிறவியெடுத்து அநியாயங்கள் செய்தபோது மகாவிஷ்ணு தானே நரசிம்மராக, கந்தனாக, வாமனாக, ராமராக, கிருஷ்ணராக அவதாரங்கள் எடுத்து அந்த அசுரர்களை அழித்தது போல் கலியுகத்தில் கலியனை அழிக்க வைகுண்டராக அவதரித்து செய்த காரண காரியங்களை மகாவிஷ்ணு அம்மை மகாலெட்சுமிக்கு விளக்கி கூறுவதை தமிழ்பாடல் வடிவில் இறைவனால் அருளப்பட்டுள்ளது. இப்புனித அகிலத்திரட்டு வேதாகமத்தின் பெருமையை உலகறிய செய்ய நடைபெறும் இப்புனித யாத்திரையில் தாங்கள் கலந்து கொண்டு ஆண்டவர் வைகுண்டரின் திருவருள் பெற்று செல்ல வருக வருக அன்புடன் அழைக்கிறோம்!
#அய்யா உண்டு
